Monday, June 27, 2011

"கண்ணீர் உளி...!"


கண்ணீர்த் துளியை உளியாக்கி நான்
காலம் வீசும் கல்லைச் செதுக்குகிறேன்
காயங்கள் யாவும் இதயம் வாங்க.. 
கையில் விழும் அடிகளில் தழும்புகள்...! 


இரேகைகள் வழி ஊடுருவும் வியர்வையில் 
கலந்து வழிகிறது காலம் திவளையாய்..!!
அனுபவச் சிலை வடிக்க வடிக்க 
ஆண்டவன் தரிசனம் அங்கே அரூபமாய்..!!


முக்காலம் முதிர்கிறது,- என் நிகழ்காலம் 
எக்காலமிடுகிறது இறந்த காலமாய் உதிர்ந்தபடி
சிந்தனைகளில் தீப்பொறி சிவக்கும் விழிகளில்
சிதறி தெறிக்கும் இலட்சியக் கங்குகள்


உடைந்துப் போகாதிருக்க உடைகிறேன் நாளும்
குடைந்து கொண்டே குழைகிறேன் குமுறும்
எரிமலையாய் அடக்கி அடக்கி வெடிக்கிறேன்
எனக்குள் நானே என்னை எரிக்கிறேன். 


வார்த்தைகள் பேசா வலிகளை காலம் 
கைகளில் தருகிறது வாங்கிய நான்
கதறும் கதறல் யாருமறியாமல் மறைகிறது
உதிரும் கற்சிதறல் சப்தமாய் காற்றில்..!!


கல் வீசல் நிற்காததால் தொடர்கிறது 
கல்லுடைத்தலும் காலகாலமாய்,- உளிக்கு ஒய்வு 
எப்போது என்கிற வினாவுக்கு விடையின்றி... 
எனக்கான சிலையை நானே வடித்தபடி...

7 comments:

Harini Nathan said...

//வார்த்தைகள் பேசா வலிகளை காலம்
கைகளில் தருகிறது வாங்கிய நான்
கதறும் கதறல் யாருமறியாமல் மறைகிறது
உதிரும் கற்சிதறல் சப்தமாய் காற்றில்..!!//

அருமை

சுவடுகள் said...

{கவிஞருக்கு வணக்கம்.சிறிது கால அவகாசத்திற்குப் பிறகு தங்களின் ”இதய” சாரலுக்கு வருகை தரும் எனக்கு, மிக நல்ல சுவை மிக்க பல படைப்புகள்...
ஆகா..!அற்புதம். தமிழ் தங்களிடம் தவமிருக்கிறது போலும்.அருமை.}

கண்ணீர்த் துளியை உளியாக்கி நான்
காலம் வீசும் கல்லைச் செதுக்குகிறேன்...

அடடா.. எத்தனை அற்புதமான உவமை. வித்தியாசமன சொல்லாட்ச்சியில் வியக்க வைக்கிறீர்.

கண்ணீர் துளியின் மென்மை + காலம் வீசும் கல்லின் வன்மை = கையாண்ட விதம் அழகு.

சுவடுகள் said...

இரேகைகள் வழி ஊடுருவும் வியர்வையில்
கலந்து வழிகிறது காலம் திவளையாய்..!!

வாசித்தபோது....காலத்தோடு மனமும் உருள்கிறது. வியக்க வைக்கும் கற்பனை நயம் அருமை.

சுவடுகள் said...

என் நிகழ்காலம்
எக்காலமிடுகிறது இறந்த காலமாய் உதிர்ந்தபடி....

நிலையாமை பேசும் இந்த வரிகளில் மனம் கனத்து கசிகிறது. நன்று.

சுவடுகள் said...

குமுறும்
எரிமலையாய் அடக்கி அடக்கி வெடிக்கிறேன்
எனக்குள் நானே என்னை எரிக்கிறேன்.

உங்களுக்கு நிகர் நீங்களே என மனம் முனு முனுக்கிறது. உங்கள் தமிழ் வெற்றி பெற இறை அருளட்டும். மனமாற வாழ்த்துகிறேன்.

தமிழ்க்காதலன் said...

வாங்க ஹரணி, உங்க வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.

காயத்ரி வைத்தியநாதன் said...

மிகவும் அருமை நண்பரே!!!